(தில்லை - திருவிருத்தம்)
பின்னணி
தில்லைச் சிதம்பரம் சென்று கூத்தபிரானின் அழகினை நேரில் காண வேண்டும் என்று ஆசை கொண்டிருந்த அப்பர் பிரான், தில்லை சென்றபோது கூத்த பிரானின் அழகினை மெய்மறந்து ரசிக்கின்றார். தில்லையில் கருநட்டக் கண்டனை என்று தொடங்கும் பதிகத்தினை (4.81) முதலில் பாடிய அப்பர் பிரான், அந்த பதிகத்தின் நான்காவது மற்றும் ஏழாவது பாடல்களில் நடராஜப் பெருமானின் நடனக் கோலத்தை நமது கண் முன்னர் கொண்டு வரும் வகையில் பாடுகின்றார்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்க முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித் தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்கூத்தன் குரைகழலே
இவ்வாறு கூத்தபிரானின் நடனக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரானுக்கு திருப்தி ஏற்படவில்லை போலும். செஞ்சடைக் கற்றை என்று தொடங்கும் பதிகத்தை பாடி, தில்லை சிற்றம்பலத்தில் சிவபிரான் நடனம் ஆடுவதன் காரணம், உயிர்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புகொண்டிருக்கும் ஆணவமலம் ஒடுங்குவதற்காக, என்பதை முதல் பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் (4.22) அனைத்துப் பாடல்களிலும் இறைவனின் நடனத்தைக் குறிப்பிடும் அப்பர் பிரான், பதிகத்தின் கடைப் பாடலில் சிவபிரானது ஆடல் ஒரு அதிசயம் என்று விளக்குகின்றார்.
மதியிலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனல் எரி ஆடுமாறே
பின்னர் சிவபிரானின் ஆடல் அதிசயத்தை, அங்கம் அங்கமாக விவரிக்கும் பாளையுடைக் கமுகோங்கி என்று தொடங்கும் இந்த பதிகத்தை பாடுகின்றார். சிவபெருமானின் ஆடல் என்று பொதுவாக முதல் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், இரண்டாவது பாடலில் திருவடியையும், மூன்றாவது பாடலில் உடுத்த துகிலினையும், நான்காவது பாடலில் இடுப்பில் கட்டிய கச்சையையும், ஐந்தாவது பாடலில் கழுத்தில் கருமணிபோல் விளங்கும் விடம் உண்ட கறையையும், ஆறாவது பாடலில் கழுத்தில் அணிந்திருக்கும் மாலையில் கோர்க்கப்பட்ட பன்றியின் வெண்கொம்பினையும், ஏழாவது பாடலில் சிரித்த முகத்தினையும், எட்டாவது பாடலில் நெற்றியையும், ஒன்பதாவது பாடலில் ஊமத்தை மலரினை சூடியுள்ள சடையையும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பாதம் தொடங்கி கேசம் வரை அழகினை ரசிக்கும் முறையினை பாதாதி கேச வர்ணனை என்று கூறுவார்கள். இறைவனுக்கு பாதாதி கேச வர்ணனையும், இறைவிக்கு கேசத்தில் தொடங்கி பாதம் வரை, கேசாதி பாத வர்ணனையாக விவரிப்பதும் கவிகளின் மரபு. பாதாதி கேச வர்ணனையாக இறைவனை வர்ணித்த அப்பர் பிரான், அந்த அழகில் நாம் மெய்ம்மறந்து நமது நோக்கத்திலிருந்து வழுவக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் கடைப் பாடலில் நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும் கூறுகின்றார். இறைவனின் திருவடிகளில் நாம் சரணடைவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிகத்தின் கடைப் பாடலில் உணர்த்துகின்றார்.
பாடல் 1
பாளையுடைக் கமுகு ஓங்கிப் பன்மாடம் நெருங்கி எங்கும்
வாளையுடைப் புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை தன்னுள்
ஆளவுடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால்
பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே
விளக்கம்
பீளை = அழுக்கு. பேய்த்தொண்டர் = பொய்யான தொண்டர்கள், பேய்த்தேர் (கானல்நீர்) என்பதுபோல. தென்னை மரத்தில் கொத்தாக காணப்படும் பூக்களை தென்னம் பாளை என்று அழைப்பதுபோன்று கமுகு மரத்தின் பூக்களையும் பாளை என்றே அழைப்பார்கள்
சிற்றம்பலத்து அரனின் ஆடல் காட்சியைக் கண்ட கண்கள் வேறு எந்த காட்சியையும் காண்பதற்கு உரிய காட்சியாக கொள்ளாது. பெருமானின் நடனத்தை விடவும் உயர்ந்த காட்சியாக வேறு எந்த காட்சியையும் கருதினால் அத்தகைய அடியார்கள் உண்மையான அடியார்கள் அல்ல என்று அப்பர் பிரான் சாடுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு இணங்கிலா ஈசன் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகத்தை நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சிவபெருமானை வணங்காத மனிதர்களையும், சிவபெருமானின் அடியார்களைச் சாராத மாந்தர்களையும் பேய்கள் என்றும் பிணங்கள் என்று திருமாளிகைத் தேவர் சாடுகின்றார். அலங்கல் = மாலை. தூர்த்த வார்த்தை = வஞ்சகச் சொற்கள். தொழும்பர் = பிறருக்கு அடிமையாக இருப்பவர், மற்ற தெய்வங்களைத் தொழும் அடியார்கள். பிட்டர் = சிறியோர். பிழம்பு = எளிதில் விளங்காதபடி பேசுதல், முணுமுணுப்புச் சொற்கள். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், சிவபிரானைச் சாராதவர்களுடன் தனது வாய் பேசாது என்றும் தனது கண்கள் அவரைக் காணாது என்றும் திருமாளிகைத் தேவர் கூறுகின்றார்.
எட்டுரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங்கு அலங்கல் தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப் பேய்களோடே
பொழிப்புரை
கொத்துக் கொத்தாக உள்ள பூக்களைக் கொண்ட பாக்கு மரங்கள் உயர்ந்து வளரும். மாட வீடுகளை நெருக்கமாகக் கொண்டதில்லை நகரில் காணப்படும் வயல்களில் உள்ள வாளை மீன்கள் குதித்து விளையாடுவதால் நீரலைகள் வெளியே தெறிக்கின்றன. இவ்வாறு செல்வ வளமும் நீர் வளமும் ஒருங்கே அமையப்பெற்ற தில்லை சிற்றம்பலத்தில் ஆடும் பெருமானின் திருவடிகள் நம்மை ஆட்கொள்ள அமைந்துள்ளன. இந்த பெருமானின் ஆடலைக் கண்ட கண்கள், காண்பதற்கு இதனினும் உயர்ந்த பொருள் வேறேதும் உலகத்தில் இல்லை. சிவபிரானின் நடனத்தைவிடவும் உயர்ந்த பொருளைக் காண்பதாகச் சொல்பவர்கள், அழுக்கு நிறைந்த கண்களை உடையவர்கள். அவர்கள் தாங்கள் பிடித்ததை விடாத பேய் போன்ற இயல்பினை உடையவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயற்சி: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்

சங்ககிரி தொகுதிக்கு கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

